செங்கல்பட்டு அருகே தமிழக அரசு பேருந்தும், கனரக டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து.
இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே முகாலி நத்தம் பகுதி அருகே இந்த பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த கனரக டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பேருந்து பயணிகள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர விபத்து காரணமாக செங்கல்பட்டு-மாமல்லபுரம் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.