புதுடெல்லி: டெல்லியில் ‘ஸ்மார்ட் நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறையின் எதிர்காலம்’ என்ற கருத்தரங்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘மின்னணு நீதிமன்றங்கள் என்பது எதிர்காலத்தின் நீதித்துறைக்கு அடிப்படையாது. டிஜிட்டல் மயமாக்கல், ஆன்லைன் மனு தாக்கல், காணொலி விசாரணை, மின்னணு ஆவணங்கள் போன்றவற்றின் மூலம் காகிதமில்லா நீதிமன்ற நடவடிக்கைகளை கொண்டு வரமுடியும். எதிர்காலத்தில் அவ்வாறு தான் இருக்கும். நீதிமன்ற விசாரணைகளை மக்கள் பார்க்கும் வகையில், ஆடியோ-வீடியோ ஸ்ட்ரீமிங் வசதியும் செய்து தரப்படும்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், அனைவருக்கும் சரியான நேரத்தில் சரியான நீதி கிடைப்பதை நீதிமன்ற அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீதி என்பது வெறும் இறையாண்மைச் செயல் அல்ல; அது அத்தியாவசிய சேவை என்ற கருத்து உள்ளது. எனவே, ஸ்மார்ட் நீதிமன்ற மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, புதிய தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’ என்றார்.