மதுரை விமான நிலையம் வருகை புரிந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி பேஸ்புக் லைவில் வீடியோ வெளியிட்ட ராஜேஸ்வரன் செயல்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது செல்போனை எடப்பாடியின் காவலர் பறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பின்னர் போலீசில் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட விசாரிக்கப்பட்டு வந்தது.
ராஜேஸ்வரன் பரபரப்பு
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் மாவட்ட செயலாளர் எனக் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர். தற்போது சிங்கப்பூரில் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்றைய தினம் சொந்த ஊருக்கு விமானம் மூலம் திரும்பினார். இந்த சூழலில் தான் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.
ராஜன் செல்லப்பா கோரிக்கை
இவர் தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ராஜேஸ்வரன் மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அவனியாபுரம் காவல்துறை உதவி ஆணையர் செல்வகுமாரை நேரில் சந்தித்து திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்தார்.
காவல்துறை மீது விமர்சனம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கட்சியின் தலைவருக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு. புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு. எத்தனை உயிர்களை காப்பற்ற போகிறது எனத் தெரியவில்லை. கொலை, கொள்ளை என பல்வேறு மோசமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சில விஷயங்களில் இந்த காவல்துறை மிகவும் துரிதமாக செயல்படுவதை நாம் அறிந்திருக்கிறோம்.
பிடிஆருக்கு ஒரு நியாயம்
இதே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரும் போது அவர் மீது அவதூறு கருத்துகளை முன்வைத்து காலணி வீச முயன்றார்கள். இதுதொடர்பாக யாரும் புகார் கொடுத்ததாக தெரியவில்லை. பெண்கள் உள்ளிட்ட 5, 6 பேரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுத்தனர். அப்படியெனில் எடப்பாடி விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
எடப்பாடி மீது விமர்சனம்
இந்த விஷயத்தில் நீதித்துறையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்ற சூழல் காணப்படுகிறது. எடப்பாடியார் கடும் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து வருகிறார். இதனால் ஏ டீம், பி டீம் ஆகியவற்றை வைத்து கொண்டு இதுபோன்று திமுக செய்கிறது. முன்னாள் முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தொண்டர்களின் நிலையை எண்ணி பாருங்கள் என அச்சுறுத்தும் வகையிலேயே இப்படி செய்கின்றனர்.
தென் தமிழகத்தில் செல்வாக்கு
இதற்கு காவல்துறையும் துணை நிற்கிறது. இந்த விவகாரத்தில் அதிமுக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. யாரிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூட ஆலோசனை கேட்கலாம். தென் தமிழகத்தில் எடப்பாடியாருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக இப்படிப்பட்ட வேலைகளை செய்யலாம் என்று ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.