திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி பகுதியில் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை, பேன்சி ஸ்டோர் மற்றும் டீக்கடை உள்ளிட்ட கடைகள் உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இருசக்கரவாகனத்தில் தீப்பிடித்து எரிந்தது.
சிறிது நேரத்தில் இந்தத் தீ கடை முழுவதும் பரவியதால் கடையில் பழுது பார்க்க வைத்திருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சாம்பலானது. அதன் பின்னர் இந்தத் தீ அருகில் உள்ள பேன்சி கடைக்கும், டீ கடைக்கும் பரவியதால் கடையில் இருந்த ஜெராக்ஸ் எந்திரம், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு வகையான பேன்சி பொருட்கள் சாம்பலானது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துத் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.