ஐதராபாத்: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போர் தொடரும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையின்(சிஐஎஸ்எப்) 54வது அமைப்புதின விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்று மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, “தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் போதுதான் ஒரு நாடு வளர்ச்சியடையும். அந்த வகையில் இந்தியாவின் கடந்த 53 ஆண்டுகால வரலாற்றில் தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் மகத்தான பங்களிப்பை சிஐஎஸ்எப் வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், பல்வேறு உள்நாட்டு சவால்கள் வெற்றிகரமாக கையாளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களும், வடகிழக்கு மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதங்கள் அதிகரித்திருந்தன. தற்போது அவை குறைந்துள்ளன. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் குறைந்து வருகின்றனர். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரானஅரசின் போர் தொடரும்” இவ்வாறு தெரிவித்தார்.