பென்னாகரம்: பென்னாகரம் அருகே நாய்களிடமிருந்து தப்பித்து ஓடியபோது கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நீர்குந்தி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக 3 வயது மதிக்கத்தக்க பெண் குட்டி யானை ஒன்று சுற்றி வந்தது. நேற்று காலை இந்த குட்டி யானையை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியுள்ளன. அப்போது, அங்கிருந்து ஓடிய குட்டி யானை நீர்குந்தி கிராமத்தில் உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், ஒகேனக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், வனத்துறை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வனவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், கிணற்றினுள் போராடிக்கொண்டிருந்த குட்டி யானையை பொதுமக்களின் உதவியுடன் கயிறு கட்டி மீட்டனர். தொடர்ந்து வாகனத்தில் ஏற்றிச்சென்று ஒகேனக்கல் வனத்தையொட்டியுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் விடுவித்தனர். குட்டி யானை கிணற்றில் விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.