தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் பல்வேறு வகையான சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு சில கிராமங்களில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் ஆகியோர் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆனால் ஒரு வாலிபர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து, அவர்களுடன் இணைந்து வாழ்ந்து, இரண்டு பேருக்கும் ஒரு குழந்தை பிறந்த பின் இரண்டு பேரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கம்மம் மாவட்டம் சரல மண்டபத்தில் உள்ள குக்கிராமம் ஏர்ரபோரு. ஆதிவாசி மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தை சேர்ந்த சத்திபாபு பட்டப்படிப்பு படித்து இடையில் நின்று விட்டார். அதே பகுதியில் உள்ள தோசலி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னகுமாரியை ப்ளஸ்-2 படிக்கும் போதிலிருந்து சத்திபாபு காதலித்து வந்தார்.
அதே நேரத்தில் தன்னுடைய முறைப்பெண் ஆன சுனிதாவையும் சத்திபாபு காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர்களுடைய வழக்கத்தின்படி இரண்டு காதலிகளுடனும் அவர் சேர்ந்து வாழ்ந்தார். இதனால் ஸ்வப்னாவுக்கு மகளும், சுனிதாவுக்கு மகனும் பிறந்தனர்.
இதனை தொடர்ந்து, இரண்டு பெண்களின் பெற்றோர்களும் தாங்கள் மகள்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சத்திபாபுவை கேட்டு கொண்டனர். இரண்டு பெண்களின் குடும்பத்தாரும் சம்மதித்ததால் ஒரே மேடையில் இரண்டு பேருக்கும் தாலி கட்டுகிறேன் என்று சத்திபாபு கூறினார். இது தொடர்பாக சத்திபாபு பெற்றோரிடம் இரண்டு பெண்களின் பெற்றோரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மூன்று பேருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர் திருமண பத்திரிகை அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து இரண்டு பெண்களுக்கும், சத்திபாவுக்கும் சத்திபாபு வீட்டில் அவர்களுடைய குல வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. இதில், மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.