நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில் சுற்றித்திரியும் எலிகளை ஆராய்ச்சி செய்ததில், அவற்றின் உடலில், ‘ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான்’ வகை உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ‘அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜி’ என்ற மருத்துவ இதழ், கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
மூன்று வகை
இதில், நியூயார்க்கில் சாலைகளில் சுற்றித்திரியும் எலிகள் மூன்று வகையான உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.
இங்கு, 79 எலிகளை சோதனை செய்ததில், 16 எலிகளுக்கு, கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் ஹென்றி வான் கூறியுள்ளதாவது:
எலிகளிடையே உள்ள கொரோனா வைரசை மேலும் கண்காணித்து வருகிறோம். இந்த பாதிப்பு எலிகளிடையே தொடர்ந்து உள்ளதா, பிற விலங்குகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள் விலங்கில் இருந்து பரவ வாய்ப்புள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது. தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதாரமில்லை
இதற்கிடையே, சி.டி.சி., எனப்படும் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதை மறுத்துள்ளது.
‘கொரோனா பரவலை ஏற்படுத்தும், ‘சார்ஸ் கோவ் – 2’ வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.
‘பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்’ என சில அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் இது அரிதானது. எனவே, இது குறித்து குழப்பமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்