புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் இன்று விவாதிக்க கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பிரதமர் மோடியின் பதில் உரையும் இடம்பெற்றன.
அதானி குழும முறைகேடு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நாடாளுமன்றத்தின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாதியின் அமர்வு கடந்த பிப். 13ம் தேதி முடிவுற்றது. தொடர்ந்து, முதல் பாதி அமர்வு நிறைவு பெறுவதாக அறிவித்து மார்ச் 13ம் தேதி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 35 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாகத் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சி தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில் அதானி விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பப்படும். அதேநேரத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
பலர் தங்களது பணத்தை இழந்து, அதில் இருந்து மீளமுடியாமல் இதுவரை 40 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசால் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு, இந்த அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து சட்டம் அமலானது. இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ, வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள், விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பணம் வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் 3 மாதம் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை குளிர்கால கூட்ட தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி அக்டோபர் 19ம் தேதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது. பிறகு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிசம்பர் 2ம் தேதி ஆளுநரை சந்தித்து, வலியுறுத்தினார். சட்டம் இயற்றி அனுப்பி 4 மாதங்கள் ஆன பிறகும், அதன் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்கப்பட்டது.
கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, சட்டப்பேரவை கூடும் போது மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதிக்கக்கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை செயலாளருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினார். அதில் ‘தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டோர், ஆன்லைன் ரம்மியால் உயிர் இழந்துள்ளனர். இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.