பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் கடந்த 9-ம் தேதி டெல்லியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து அவருடைய உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்கில் நடிகர் சல்மான் கான் உட்பட பாலிவுட் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். சதீஷ் கெளசிக் இறந்து சில நாள்களே ஆகியிருக்கும் நிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் என்பவரின் மனைவி, இது தொடர்பாக டெல்லி போலீஸில் புகாரளித்திருக்கிறார்.
அதில், “என்னுடைய கணவர் அடிக்கடி சதீஷ் கெளசிக்கை சந்தித்துப் பேசுவது வழக்கம். துபாயில் முதலீடு செய்வதற்காக என் கணவரிடம் சதீஷ் 15 கோடி ரூபாய் கொடுத்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி துபாயில் சதீஷ் கெளசிக் என்னுடைய கணவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, தான் கொடுத்த ரூ.15 கோடியை திரும்பக் கொடுக்கும்படி கேட்டார் சதீஷ். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ரூ.15 கோடி கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதைச் சுட்டிக்காட்டி பணத்தை எதிலும் முதலீடும் செய்யவில்லை, திரும்பவும் கொடுக்கவில்லை என்று கூறி சதீஷ் வாக்குவாதம் செய்தார். தனக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது என்றும் சதீஷ் தெரிவித்தார். துபாயில் நடந்த பார்ட்டி ஒன்றுக்கு இருவரும் சென்றனர்.
அந்த பார்ட்டியில் தாவூத் இப்ராஹிம் மகனும் கலந்துகொண்டிருந்தார். பணத்தை விரைவில் கொடுப்பதாக சதீஷிடம் என்னுடைய கணவர் உறுதியளித்தார். பணம் கொடுத்தற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், அதே சமயம் பணத்தைக் கொடுப்பதாகவும், அதற்கு கால அவகாசம் தேவை என்று சதீஷிடம் என் கணவர் தெரிவித்தார்.
என்ன பிரச்னை என்று என் கணவரிடம் நான் கேட்டதற்கு, கொரோனா காலத்தில் சதீஷ் கொடுத்த பணத்தை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார். அதோடு சதீஷை தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இப்போது சதீஷ் இறந்துவிட்டதாக செய்திவருகிறது. பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் இருக்க என்னுடைய கணவரும், அவரின் ஆட்களும் சேர்ந்து சதிசெய்து போதைப்பொருளைப் பயன்படுத்தி, சதீஷைக் கொலைசெய்திருப்பதாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். டெல்லியில் சதீஷ் கலந்துகொண்ட பார்ட்டியில் 25 பேர் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பெண் கொடுத்திருக்கும் புகார் குறித்தும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
புகார் கொடுத்திருக்கும் பெண்ணையும் அழைத்து விசாரிக்க முடிவுசெய்திருக்கின்றனர். அதோடு சதீஷ் பண்ணை வீட்டிலிருந்து சில போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். பிரேத பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சதீஷ் பண்ணை வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே சதீஷ் தன்னுடைய மேலாளரை அழைத்துக்கொண்டு, காரில் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சதீஷ் இறந்துவிட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அவர் கொலை தொடர்பாக சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்று கருதப்படும் தொழிலதிபரிடமும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டிருக்கின்றனர். புகார் கொடுத்திருக்கும் பெண் அந்தத் தொழிலதிபரின் இரண்டாவது மனைவியாவார். ஏற்கெனவே விகாஷ்மீது இதே பெண், `என்னை பாலியல் வன்கொடுமைசெய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டார். அவருடைய மகனும் என்னைப் பாலியல் வன்கொடுமைசெய்ததால், அவரிடமிருந்து வந்துவிட்டேன்’ என போலீஸில் புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.