பாலாவின் டைரக்சனில் மீண்டும் நடிக்க விரும்பும் விஷால்

இயக்குனர் பாலா தனது திரையுலக பயணத்தில் தற்போது மிக இக்கட்டான தருணத்தில் இருந்து வருகிறார். சூர்யாவை வைத்து அவர் ஆரம்பித்த வணங்கான் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்வதாக அறிவித்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

சேது, நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் வெளியான பிறகு விக்ரம், சூர்யா ஆகியோருக்கு திரை உலகில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை பார்த்து சில ஹீரோக்கள் பாலாவின் படங்களில் எப்படியாவது ஒருமுறையாவது நடித்து விட வேண்டும் என விரும்பிய காலமும் இருந்தது. அதேபோல அப்படி நடித்த அதர்வா, ஆர்யா ஆகியோர் திரையுலக பயணத்தில் திருப்புமுனையையும் பெற்றனர்.

அந்த சமயத்தில் பாலாவின் டைரக்சனில் எப்படியாவது நடிக்க வேண்டும் என ஆர்யா மூலமாக சிபாரிசு செய்து வாய்ப்பைப் பெற்று, அவன் இவன் படத்தில் இரண்டு கதாநாயகர்களின் ஒருவராக நடித்தார் விஷால். அந்த படத்திற்காக அவர் மாறுகண் கொண்ட கதாபாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தன்னை வருத்திக்கொண்டு தான் நடித்தார். அதற்காக அவருக்கு பாராட்டுகளும் கிடைத்தது.

பொதுவாகவே பாலாவின் படங்களில் நடிப்பவர்கள் அவர் டைரக்சனில் தாங்கள் நடித்ததற்காக மிகவும் பெருமைப்பட்டு வெளியே பேசினாலும் அடுத்ததாக அவரது படங்களில் நடித்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பார்கள். காரணம் அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பு என்கிற பெயரில் பாலா கொடுக்கும் டார்ச்சர்களை அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். இந்த நிலையில் நடிகர் விஷால், பாலாவின் டைரக்சனில் மீண்டும் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி பட புரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டபோது, கல்லூரி மாணவி ஒருவரின் கேள்விக்கு அளித்த பதிலில், தான் மீண்டும் நடிக்க விரும்பும் இயக்குனர் என்றால் அது பாலா தான் என்று கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவன் இவன் படத்தில் நடித்தபோது தான் சிரமங்களை அனுபவித்திருந்தும், சமீபத்தில் பாலாவின் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிய நிகழ்வை பார்த்தும் கூட பாலாவின் டைரக்சனில் மீண்டும் நடிக்க வேண்டும் என விஷால் விருப்பம் தெரிவித்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.