புதுடெல்லி: ஒரே பாலின திருமணங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்ற போதிலும் அதற்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒரே பாலின உறவு சட்டத்துக்கு எதிரானது என்ற 377வது சட்டப்பிரிவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டில் ஓரின சேர்க்கை குற்றமில்லை என தீர்ப்பளித்தது. அத்துடன் 377வது சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் ஒரே பாலின உறவு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணங்களை அங்கீகரிக்க கோரி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தாங்களே விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் தெரிவித்தது. அதன்படி, இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சமூகத்தில் பல்வேறு வகையான உறவுகள் இருக்கின்றன. ஒரே பாலின திருமணங்கள் சட்டவிரோதமானவை அல்ல. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றமல்ல. இந்த தம்பதியினருக்கு அந்தந்த மாநில அரசுகள் அங்கீகாரம் வழங்காமல் இருக்கலாம். இவர்களை கணவன், மனைவி, குழந்தைகள் என்று இருக்கும் குடும்பத்துடன் ஒப்பிட முடியாது. நாட்டின் விதிமுறைகள், சமூக ஒழுக்கத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி வாழும் போது, சட்டத்தின் பல்வேறு நிலைகளில், அவர்களில் யாரை கணவன் அல்லது மனைவி என்று பிரித்து கூறுவது கடினமானது. மேலும், அதிகாரப்பூர்வமாக இயற்றப்பட்ட சட்டங்களினால் எந்த பலனும் இல்லாமல் போய்விடும். இந்து திருமண சட்டம் , கிறிஸ்தவ திருமண சட்டம் , பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டம் ஆகியவை உயிரியல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்கின்றன. திருமணம் என்பது ஆண், பெண்ணுக்கு இடையே தான் நடக்க வேண்டும் என்று சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. ஒரே பாலின திருமணத்தை பதிவு செய்வது சட்டவிதிகளை மீறுவதாகும். நாட்டில் நடைமுறையில் இருக்கும் குடும்ப அமைப்புகளை மீறி, இது போன்ற திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கூடாது. எனவே, ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்களை விசாரணைக்கு ஏற்று கொள்ள கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.