தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட குஷ்பு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் சர்வதேசப் பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் சுவாதி மாலிவால், தானும் சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பர்கா சுக்லா, `சுவாதி மாலிவாலுக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
தனியார் ஊடகத்துடனான பேட்டியின்போது இது குறித்துப் பேசிய, “சுவாதி மாலிவால் தன்னுடைய மன சமநிலையை இழந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் இப்படிப் பேசுகிறார். முதலில் தன் கணவர்மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தற்போது தன்னுடைய இறந்துபோன தந்தையைக் குற்றம்சட்டியிருக்கிறார். இந்த உலகிலேயே இல்லாத வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். இது முற்றிலும் தவறானது, மிகவும் வெட்கக்கேடானது.
சுவாதி மாலிவால் 2016-ல் தன்னுடைய தந்தை ராணுவ வீரர் என்றும், அவரை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் கூறியிருந்தார். இன்று அதே தந்தை உயிருடன் இல்லாதபோது அவரைப் பற்றி இவ்வாறு பேசுகிறார். அவர் இறந்துவிட்டதால் தற்போது சமூகத்தில் பல பிரச்னைகளை இது உருவாக்கும் என்பதால், அவரை உடனடியாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இது டெல்லியின் பெண்களைப் பாதிக்கும் தவறான செய்தியாகும். அதோடு, தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவைப் பற்றிய தவறான கருத்து இது. மேலும், சுவாதி மாலிவால் பாதி நேரம் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் எந்த வகையில் பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத்தர முடியும். எதற்காக அவர் வெளிநாடு செல்கிறார்… நிதி சேகரிக்கவா?” என்று கேள்வியெழுப்பிச் சாடினார்.