கர்நாடகாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை அசிங்கப்படுத்துவதாக தெரிவித்தார்.
லண்டனில் உள்ள உலக புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘எனது போனிலும் உளவு மென்பொருளான பெகாசஸ் ஆப்பை உள்ளீடு செய்துள்ளனர். ஏராளமான அரசியல்வாதிகளின் போன்களில் பெகாசஸ் இருந்தது. உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, ‘தயவுசெய்து நீங்கள் தொலைபேசியில் என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள், ஏனென்றால் நாங்கள் பதிவு செய்கிறோம்’ என்று கூறினர்.
இதுவே இந்தியாவில் எதிர்கட்சிகளாகிய நாங்கள் உணரும் நிலையான அழுத்தம். எதிர்க்கட்சிகள் மீதான வழக்குகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சிக்கிறோம். இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜனநாயகத்திற்குத் தேவையான நிறுவன கட்டமைப்பான நாடாளுமன்றம், சுதந்திரமான பத்திரிக்கை, நீதித்துறை, விவாதம் உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதலை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
அரசியலமைப்பில், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று விவரிக்கிறது, அந்த ஒன்றியத்திற்கு பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் தேவை. அந்த பேச்சுவார்த்தை தான் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறது. பாராளுமன்ற கட்டிடத்தின் முன் உள்ள காந்தி சிலை முன்பு போராடியதற்காக நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம்’’ என்று பேசினார்.
இந்தநிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்வினை ஆற்றியுள்ளார். கர்நாடகாவில் வருகிற மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. அந்தவகையில் மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவின் மூத்த தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கர்நாடகாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும்போது, ‘‘இந்தியாவில் ஜனநாயகம் குறித்த ராகுல் காந்தியின் கருத்து கர்நாடகா, இந்தியா மற்றும் கடவுள் மீதான தாக்குதல். லண்டன் மண்ணில் இருந்து இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்விகள் எழுப்பப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
‘பயமா..எனக்கா..?’ – பிரதமர் மோடிக்கு சவால் விட்ட தெலங்கானா முதல்வர் மகள்.!
இவர்கள் பகவான் பசவேஸ்வராவையும், கர்நாடக மக்களையும், இந்திய மக்களையும் அவமதிக்கிறார்கள். கர்நாடகம் அத்தகையவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இந்த ஜனநாயக அமைப்பை முழு உலகமும் படிக்கிறது. மேலும் இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன, இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்று நாம் கூறலாம். இந்திய ஜனநாயகத்தை தாக்க சிலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.