கோவை: நாகப்பட்டினம் மாவட்டம் வடபாதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருத்திகா (26). இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து நாகப்பட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணனுக்கு திருமணமாகவில்லை. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் வந்தனர்.
நாளடைவில் நெருக்கமாகி பின்னர் இது காதலாக மாறியது. இந்த விவகாரம் கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவை வந்தனர். இருவரும் கணவன்- மனைவி என கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். தங்களது கள்ளக்காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், கிருத்திகா அவமானத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனால், இருவரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கினர். கடந்த 5 நாட்களாக தங்கியிருந்த அவர்கள் லாட்ஜ் வாடகை கொடுக்கவில்லை. இதன் காரணமாக லாட்ஜ் ஊழியர் ஒருவர் வாடகை பணம் கேட்பதற்காக அவர்களது அறைக்கு நேற்று சென்றார். அப்போது அறையில் தங்கி இருந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லாட்ஜ் ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரிசோதனை செய்த போது, கிருத்திகா உயிரிழந்தது தெரிந்தது. உயிருக்கு போராடிய கிருஷ்ணனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். கிருத்திகாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர். கிருஷ்ணன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணனும் உயிரிழந்தார்.