மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், 2004-2009 வரை ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என 2021-ல் சி.பி.ஐ விசாரணையை முடித்துக்கொண்டது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கை மீண்டும் தோண்டியெடுத்து, லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி, மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட மொத்த குடும்பத்தையும் விசாரித்துவருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி, பாட்னா, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் லாலுவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்குகளில் ரூ.600 கோடி அளவிலான சொத்துகள் கைமாறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இது குறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ரூ.350 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளின் உரிமை மற்றும் பல்வேறு பினாமிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.250 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
மேலும் கணக்கில் வராத, ஒரு கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க டாலர், நகைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு, பல ரயில்வே மண்டலங்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் லாலு பிரசாத் குடும்பத்தின் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.