வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் அடுக்குமாடி குடியிருப்பிற்காக குழி தோண்டியபோது 100க்கும் மேற்பட்ட வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
110 வெடிகுண்டுகள்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சமீபத்தில் தலைநகர் பியோங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பியோங்யாங்கில் குடியிருப்பு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், மற்றும் கண்ணி வெடிகள் போன்ற பயங்கரமான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
Reuters/Lee Jae-Won /FA
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் வெடிகுண்டுகளை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
மேலும் இந்த வெடிகுண்டுகள் 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற கொரிய போரின் போது அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்டவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுகள் செயலிழப்பு
தலைநகர் பியோங்யாங்கில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் பத்திரமாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCNA/REUTERS
கொரிய போரின் போது தென் கொரியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா வட கொரியா மீது எண்ணற்ற வெடிகுண்டுகளை வீசியது, இவை கிழக்கு ஆசிய நாடுகள் மீது 2ம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.