வரவிருக்கும் ஹூண்டாய் கார்கள் மற்றும் எஸ்யூவி விபரம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் புதிய வெர்னா உட்பட புதிய கிரெட்டா, ஸ்டார்கேஸர் எம்பிவி ரக மாடல் மற்றும் கேஸ்பர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்யலாம்.

டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் தனது மற்றொரு பிராண்டான கியா ஆகியவற்றுடன் கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய மாடல்களை நவீன வசதிகளுடன், டிசைன் மாற்றங்களுடன் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ஹூண்டாய் அல்கசார் காரில் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா 2023

மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஹூண்டாய் வெர்னா கார் தொடர்பான பல்வேறு விபரங்களை வெளியிட்டு வரும் நிலையில் இரண்டு பெட்ரோல் என்ஜின்களை பெற்றுள்ளது. டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

1.5-லிட்டர் டர்போ GDi, பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல் 160 Hp வரை பவர் வெளிப்படுத்தலாம். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு விதமாக வழங்கப்பட்டிருக்கும்.

அடுத்து, 115 Hp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் இன்டலிஜென்ட் வேரிபிள் டிரான்ஸ்மிஷன் (IVT) என இரு ஆப்ஷனை  கொண்டிருக்கும்.

வெர்னா காருக்கு சவாலாக ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற மாடல்கள் உள்ளன

2023 ஹூண்டாய் கிரெட்டா

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற 2023 கிரெட்டா மாடல் தோற்ற அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை பெற்று தனித்துவமான புதிய இன்டிரியருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் நவீனத்துவமான பாதுகாப்பு அம்சங்களை பெறலாம். புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கூடுதலான பவர் வெளிப்படுத்துவதாக அமையலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, கியா செல்டோஸ், ஹாரியர், கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

ஹூண்டாய் ஸ்டார்கேஸர்

கியா கேரன்ஸ் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹூண்டாய் Stargazer மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற கார்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு என்ஜின் ஆப்ஷன்களுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் விற்பனையில் மஹிந்திரா மார்ஸ்ஸோ,மாருதி எக்ஸ்எல்6 மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. ஸ்டார்கேஸர் எம்பிவி மாடல் 2023 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் கேஸ்பர் எஸ்யூவி

சிறிய ரக எஸ்யூவி சந்தையில் எந்தவொரு மாடலையும் தற்பொழுது ஹூண்டாய் விற்பனை செய்யவில்லை. ஆனால் மிகவும் பரபரப்பான இந்த சந்தையில் ஹூண்டாய் கேஸ்பர் எஸ்யூவி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி உள்ளது.

Casper மைக்ரோ எஸ்யூவி காரில் 81 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பலாம். சிஎன்ஜி ஆப்ஷனிலும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

டாடா பஞ்ச், மேக்னைட், கிகர், மாருதி எஸ் பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களுடன் நேரடியான சவாலினை ஹூண்டாய் கேஸ்பர் எஸ்யூவி ஏற்படுத்தலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.