விளாத்திகுளம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட சுறா இறக்கைகள், திருக்கை பூவை ரசாயனம் ஊற்றி அழித்த வனத்துறை

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்று பறிமுதல் செய்யப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான சுறா மீன் இறக்கைகள், திருக்கை மீன் பூ ஆகியவற்றை வனத்துறையினர் ரசாயனம் ஊற்றி அழித்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்துள்ள வேம்பாரில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சுறா மீன் இறக்கை மற்றும் திருக்கை மீன் பூ கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் வேம்பார் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் லோடுவேன் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் வாகனத்தை ஓட்டிச் சென்றவர் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியை சேர்ந்த கலீல் ரகுமான் மகன் சாகுல்ஹமீது (34) என்பதும், சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான சுறா மீன் இறக்கைகள், திருக்கை மீன் பூ ஆகியவற்றை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சாகுல் ஹமீதை கைது செய்து வாகனம் மற்றும் சுறா மீன் இறக்கைகள், திருக்கை மீன் பூவை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின், வனவர் பாண்டியராஜன் ஆகியோர் கடத்தலில் ஈடுபட்ட சாகுல் ஹமீதை விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன் இறக்கைகள், திருக்கை மீன் பூ ஆகியவற்றை விளாத்திகுளத்தில் உள்ள வனசரக அலுவலக பகுதியில் குழி தோண்டி புதைத்து ரசாயனம் ஊற்றி அழித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.