சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் சிற்பி திட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவ மற்றும் மாணவிகள் ‘இயற்கையை பேணுவோம்’ எனும் தலைப்பின் கீழ் 5 லட்சம் விதை பந்துகளை தயாரித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகள் தயாரித்த விதை பந்துகளை வனத்துறையிடம் கொடுத்தனர்.
அத்துடன் பள்ளி மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் மரகன்றுகளை நட்டும் உலக அளவில் சாதனை புரிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், ‘‘வெப்பநிலை நம்மை பாதிக்காமல் காக்க மரங்கள் தான் உதவுகின்றன. இயற்கைக்கு எதிராக நாம் பேராபத்தை சந்திக்க இருக்கிறோம்.
அதற்கு முக்கிய காரணமே நாம் பயன்படுத்துகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் தான். ஒவ்வொரு பிளாஸ்டிக் குப்பையும் மக்க ஆயிரம் ஆண்டுக்கு மேலாகும். இவை மனிதர்கள் முதற்கொண்டு விலங்குகள், மரங்கள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே, வரும் தலைமுறையாவது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.