Oscars 2023 : `நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதினை வெல்லும்! – இசையமைப்பாளர் கீரவாணி நம்பிக்கை

இந்த ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா மார்ச் 13ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த `ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் `நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார்.

RRR

உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட இப்பாடல் `கோல்டன் குளோப்’, `Hollywood Critics Association‘ விருதினையும் வென்றது. இதையடுத்து இப்பாடல் ஆஸ்கர் விருதினை வெல்லுமா? எனப் படக்குழுவினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த விருது நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராஜமெளலி, ராம் சரண், கீரவாணி உள்ளிட்ட `ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பே அமெரிக்கா சென்றுவிட்டனர்.

இதையடுத்து மார்ச் 13ம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விழாவில் `நாட்டு நாட்டு’ பாடல் விருதினை வெல்லுமா என்பதைக் காண திரையுலகினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கீரவாணி

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இப்பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி, “எங்களின் `நாட்டு நாட்டு’ பாடல் மூன்று அமெரிக்க விருதுகளைப் பெற்றுள்ளது. அப்போது ஆஸ்கர் விருதினையும் சேர்த்து நாங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம் எனச் சொல்லிருக்கேன். இப்போது நாங்கள் அந்தத் தருணத்தின் அருகில் நின்றிருக்கிறோம். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். `நாட்டு நாட்டு’ ஆஸ்கர் விருதினை வெற்றிபெற தகுதியான பாடல்தான். ஒரு இசையமைப்பாளராக எனது திறமைகளை நான் அறிவேன். ஒவ்வொரு இசையமைப்பிலும் எவ்வளவு நல்லது, கெட்டது இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் `நாட்டு நாட்டு’ பாட்டுக்கு சிறப்பாக இசையமைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்றார்.

மேலும், “’நாட்டு நாட்டு’ பாடலைப் பாடிய கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் இருவரும் ‘நாட்டு நாட்டு’ பாடலை ஆஸ்கர் விழாவில் நேரடியாக பாடவுள்ளனர்” என்றார்.

இந்நிலையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் `ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் `நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் மட்டுமல்ல கிராமி விருதையும் வெல்ல வேண்டும் என பேசியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர், ” ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதினை மட்டுமல்ல கிராமி விருதையும் வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் நம்மில் எவருக்கும் வழங்கப்படும் எந்தவொரு விருதும் இந்தியாவை உயர்த்தும் மற்றும் நமது கலாசாரத்தின் செறிவை உயர்த்தும்” என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.