''அகதிகள் படகில் தொடங்கி ஆஸ்கரை தொட்ட பயணம்” – மேடையில் நடிகர் கீ ஹூங் குவான் நெகிழ்ச்சி!

சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கீ ஹூ குவான், “அம்மா, நான் ஆஸ்காரை வென்றுவிட்டேன்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகளவில் திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக நடிகர் கீ ஹுங் குவான் தட்டிச்சென்றார். இவ்விருதை வென்றதும் அவர், ”அம்மா நான் ஆஸ்கார் விருதை வென்றுவிட்டேன்” என உணர்ச்சி ததும்ப தனது உரையை தொடங்கினார்.

image

”எனது அம்மாவுக்கு 84 வயதாகிறது. அவர் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார். அம்மா, நான் ஆஸ்கரை வென்று விட்டேன். என்னுடைய பயணம் ஒரு படகில் தொடங்கியது. அகதிகள் முகாமில்தான் ஓர் ஆண்டைக் கழித்தேன். தற்போது ஆஸ்கர் மேடையில் விருதினை பெற்றுள்ளேன்.  இதைப் போன்ற நிகழ்வுகள்  திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள்.

இதுதான் அமெரிக்கனின் கனவு. எனது தாய்க்கும் அவரது தியாகங்களுக்கும், எனது காதல் மனைவிக்கும் நன்றி” என்றார் நா தழுதழுத்தபடி. நடிகர் கீ ஹுங் குவான் இவ்வாறு பேசி முடித்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இந்த ஆண்டு அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என்கிற பெருமையை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜேமி லீ கர்டிஸ்  பெற்றார்.

கீ ஹூ குவான் வியட்நாம் நாட்டில் பிறந்தவர். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே இவரது குடும்பம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ்க்கு குடிபெயர்ந்தது. ஆஸ்கர் விருதினை பெறும் ஆசிய வம்சாளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் இவர். இதற்கு முன்பு 1985 ஆம் ஆண்டு கம்போடியாவைச் சேர்ந்த ஹையிங் எஸ்.நகோர் என்பவர் தி கில்லிங் ஃபீல்ட்’  படத்திற்காக விருதினை பெற்றிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.