சென்னை மாநகராட்சியில் உள்ள அண்ணா நகர் டவர் பூங்கா மிகவும் புகழ்பெற்றது. இது 1960களில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 100 அடி உயரத்துடன் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பசுமையான பகுதிகளும், கட்டிடங்களும் அற்புதமாக காட்சியளிக்கும். 2011ஆம் ஆண்டு வரை அண்ணா நகர் டவர் பூங்காவை பொதுமக்கள் தினசரி பார்வையிட்டு வந்தனர்.
அண்ணா நகர் டவர் பூங்கா
ஆனால் அதன்பிறகு பல்வேறு தற்கொலை நிகழ்வுகள் நடந்ததால் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அருகிலுள்ள பூங்கா மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பொழுதை கழிக்க பொதுமக்கள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் பாரம்பரிய கட்டடங்களை புதுப்பிக்கும் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியது.
புதுப்பிக்கும் பணிகள்
அந்த வகையில் கடந்த ஆண்டு அண்ணா நகர் டவர் பூங்காவில் புதுப்பொலிவு பெறச் செய்யும் பணிகள் தொடங்கின. மொத்தமுள்ள 12 தளங்களிலும் உள்ள பால்கனிகளில் கிரில் கேட்கள் அமைத்து பாதுகாப்பான அம்சங்களை சேர்த்துள்ளனர். சுவற்றில் தேவையின்றி கிறுக்குவதை தவிர்க்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரைய திட்டமிடப்பட்டது. மிருதுவான மற்றும் வழுக்காத டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திறந்து வைக்கிறார்
கிரில் கம்பிகள் நெருக்கமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது முற்றிலும் பாதுகாப்பாக மற்றும் புதுப்பொலிவுடன் காணப்படும் அண்ணா நகர் டவர் பூங்காவை விரைவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.
கட்டணம் வசூலிப்பு
இதையொட்டி தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த டவர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு கட்டணம் வசூலிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 80களில் இந்த டவர் மீது ஏறி பார்த்தால் சுற்றிலும் பசுமையாக காட்சியளிக்கும்.
கூட்ட நெரிசல்
ஆனால் தற்போது முழுவதும் கட்டடங்களாக மாறிவிட்டன. முன்பெல்லாம் அண்ணா நகர் பகுதியில் இருந்து மட்டுமே மக்கள் நேரில் வந்து பார்வையிடுவர். தற்போது சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் டவர் பூங்கா திறப்பு என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம் கூட்டத்தை சரியான முறையில் கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இனிமேல் விடுமுறை வந்தாலே அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு வந்துவிடுவோம். இங்கு இனிமையான அனுபவம் கிடைக்கிறது. கட்டணம் வசூலிக்க வேண்டாம். அதற்கு பதிலாக நேரக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கலாம் என்று தெரிவித்தனர்.