கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் அனுமதித்த அளவைவிட அதிக அளவில் கனிமவளங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
உலகின் பல்லுயிர் சூழல் நிறைந்த எட்டு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை முக்கியமாக பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நிலையில் வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், வனத்தை ஒட்டி இருக்கக்கூடிய விவசாய நிலங்களிலும் செம்மண், பாறைகள் ஆகியவை அதிக அளவில் எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவையிலுள்ள தமிழக – கேரள எல்லைப் பகுதியான சின்னாம்பதி மலை கிராமப் பகுதியில் புதிய தலைமுறை நேரடியாக கள ஆய்வு செய்ததில் விவசாய நிலங்களில் 50 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் அதிக அளவில் அண்டை மாநிலமான கேரளாவிற்கு மண் எடுத்துச் செல்லப்படுவதும் தெரிய வந்துள்ளது. இதனால் மலை பகுதியிலிருந்து வரும் வனவிலங்குகள் வனத்தை ஒட்டி மற்ற பகுதிகளுக்கு நடந்து செல்லும் வழித்தடங்கள் தடைபட்டுள்ளது. மேலும் நீர் வழிப்பாதைகள் ஆங்காங்கே தடைபடுவதால் விவசாய நிலங்களுக்கு தேவையான நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
அத்துடன் கோவை மாவட்டத்தில் இயற்கை சூழல் மிக்க வனப்பகுதியை ஒட்டியுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர் ஆகிய பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளை போவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கனிம வளத்துறை அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கிராவல், ஜல்லி, எம்சாண்ட், போல்டர் ஆகியவை ஒரு யூனிட்டுக்கு 400 ரூபாய் என வசூல் செய்யப்படுவதாகவும், மேலும் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய கனிமவள அனுமதிச்சீட்டுக்கு தொகை செலுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை சிலர் ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மக்கள் நம்மிடையே கூறுகையில், “மேற்கூறிய எல்லா குற்றச்சாட்டும் தெரிந்தும்கூட கனிமவளத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை. கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள இயற்கை வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குவாரிகளில் வெடி வைப்பதால், பெரிய கனரக வாகனங்கள் பெருமளவில் கிராமப்புற சாலைகள் வழியாக செல்ல நேர்கிறது. அதனால் மக்கள் பாதிக்கப்பகின்றனர். அதேபோல் வனப்பகுதியை ஒட்டி கனிம வளங்கள் அதிக அளவில் எடுக்கப்படுவதால் வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அதிக அளவிலான பள்ளங்களால் நீர்வழி தடங்கள் தடை பெறுகிறது. அதனால் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது” என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM