சென்னை: “மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகரை தாக்கியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 5 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும்” என்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “செல்ஃபி எடுக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட நபரைக் கேட்க வேண்டும். அவர்கள் அனுமதித்தால்தான் செல்ஃபி எடுக்க முடியும். அப்படியில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, அனுமதியின்றி ஒருவரை படம் எடுப்பது தவறு. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை மெட்ரோ ரயிலில் செல்லும்போது ஒருவர் செல்ஃபி எடுக்க வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், அவரை கன்னத்தில் அறைந்தாரா? இல்லையா? ஆனால், மதுரையில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ன செய்தார் என்றால், கையைக்காட்டி வேண்டாம் என்று வீடியோ எடுத்த நபரை தடுத்தார்.
அப்போது, அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரி சரியா செயல்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை வீடியோ எடுக்க முடியதாபடி தடுத்திருக்கிறார். அதற்காக அவர் மீது வழப்பறி வழக்குப் பதிவு செய்வது என்ன நியாயம்? அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை அதிமுக எதிர்கொண்டு மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கும். நீதிமன்றத்தில் இதை எடுத்துக் கூறுவோம். வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், இந்தப் பிரச்சினை எதிரொலிக்கும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் வந்த விமானத்தில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி எம்.வையாபுரிபட்டியைச் சேர்ந்த அமமுக-வை சேர்ந்த ராஜேஸ்வரன் (42) என்பவரும் பயணித்தார்.
மதுரை விமான நிலையம் வந்தபின், ராஜேஸ்வரன் ‘துரோகியுடன் பயணம் செய்தோமே’ என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரன் செல்போனை பறித்துக்கொண்டு அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் அளித்த புகாரின்பேரில், ராஜேஸ்வரன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தன்னை தாக்கி மிரட்டி, செல்போனை பறித்ததாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பழனிசாமி பாதுகாவலர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் அக்ரீ கிருஷ்ணமூர்த்தி மகன் (அரவிந்தன்) ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி, தாக்குதல், செல்போன் பறிப்பு , காயம் ஏற்படும் வகையில் கொடூரமாக தாக்குதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.