பெண் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியலில் சமத்துவநிலை அடைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ இயக்கங்கள், போராட்டங்கள், பிரசாரங்கள் இச்சமூகத்தில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகமுள்ளது. பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக, பெண் கூட்டமைப்பு (THE PEN COLLECTIVE) என்ற திட்டம் 10.3.2023 அன்று, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில் தொடங்கப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பு, பூரணி மற்றும் அஸ்விதா என இரு தன்னார்வல பெண்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. “அரசியலில் வாக்காளர்களாக பெண்கள் அதிகமாக இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் மிகவும் குறைவு. அந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசியல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்கை உறுதிப்படுத்தவும் இக்கூட்டமைப்பு செயல்படும்” என்று பூரணி தெரிவித்தார்.
துவக்க நிகழ்வில் ஐ.ஐ.டி பேராசிரியர் கல்பனா கருணாகரன், வழக்கறிஞர் ஜோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கல்பனா கருணாகரன் பேசுகையில், ”இன்று டீக்கடைகள் உள்ளிட்ட இடங்களை பெரும்பான்மையாக ஆண்களே ஆக்கிரமித்துள்ளனர். பொது இடங்களில் பெண்களுக்கு உரிமையில்லை என்று திட்டமிட்டே கற்பிக்கப்படுகிறது. பெண்கள் வீடு, வேலை என்று மட்டும் சுருங்கிவிடக்கூடாது. இவ்விரண்டு இடங்களைத் தவிர வேறு இடங்களும் இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.
அரசியலில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது. இந்நிலையிலும் ஒரு பெண் அரசியல்வாதி ஊழல் செய்துவிட்டால் அவரை இழிவுபடுத்தி திட்டுகிறார்கள்” என்றார்.
வழக்கறிஞர் ஜோதிலட்சுமி பேசுகையில், “பெண்கள் பெரிதளவு சாதித்தாலும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடி அதிகமாக உள்ளது. பெண்ணிய இயக்கங்கள் பல உருவாகியும் பாலின சமத்துவத்தை இன்னும் நிலைநாட்ட முடியவில்லை” என்றார்.