கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே 2 மலைக்கிராம மக்கள் சாலை வசதியில்லாததால், அவசர சிகிச்சைக்கு டோலி கட்டி செல்ல வேண்டிய துயர நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வெள்ளக்கெவி ஊராட்சியில் சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கும், கொடைக்கானலுக்கு இடையே இதுவரை சாலை வசதி இல்லை. இதனால் இந்த கிராமங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டுமென்றால், சுமார் 84 கிமீ சுற்றிச் செல்லும் அவல நிலை உள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகளுக்கும், அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. பிரசவம் உட்பட மிக அவசர சிகிச்சை தேவைப்படுவோரை, டோலி கட்டி வனப்பகுதியின் வழியே சுமார் 8 கிமீ தூக்கி செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால் வழியிலேயே சிலர் உயிரிழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். பிரசவ நேரத்திலும் பெண்கள் பல வேதனைகளை எதிர் கொள்கின்றனர்.
இதுகுறித்து சின்னூர், பெரியூர் மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு மிக அருகில் உள்ள ஊர் கொடைக்கானல். ஆனால், அடர்ந்த வனப்பகுதி இடையில் வருவதாலும், சாலை வசதியில்லாததாலும், சுமார் 84 கிமீ தூரம் பயணித்துதான் கொடைக்கானலுக்கு செல்ல முடியும்.
இதனால் வனப்பகுதி வழியாக உயிரை பணயம் வைத்து பெரியகுளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் எங்களின் நலன் கருதி இப்பகுதிகளுக்கு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தர வேண்டும்’’ என்றனர்.