திட்டக்குடி: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் நேற்று நடந்த கொடியேற்று விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசு, கலைஞர் காலத்திலிருந்தே விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. 1996ல் முதல்வராக கலைஞர் இருந்தபோது, ஆலோசனைக்குழு அமைத்து ஒன்றிய அரசுடன் பேசி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் நஷ்டஈடாக பெற்றுக் கொடுத்தார்.
தற்போது நிலம் கொடுக்க விரும்புகிறவர்களுக்கு உரிய நஷ்டஈடும், தகுதிக்கேற்ற வேலையும் வழங்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான பாதையில்தான் இவ்விவகாரத்தை எடுத்துச்செல்வார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில், ஆளுநர் செய்யும் தவறு காலம் தாழ்த்துவதுதான். அரசின் நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிராக மாநில அரசின் தீர்மானம் இருந்தால் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து தேவையான திருத்தங்களை செய்ய ஆலோசனை வழங்கி இருக்கலாம். நீண்ட காலம் வைத்திருந்துவிட்டு தற்போது திருப்பி அனுப்புவது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். இவ்வாறு அவர் கூறினார்.