புதுடெல்லி: ஆபரேஷன் திரிசூல் மூலம் கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். நிதி, பண மோசடி, கடத்தல், கொலை குற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி வெளிநாடு தப்பியோடிய குற்றவாளியை கண்டுபிடித்து இந்தியா கொண்டு வர ஆபரேஷன் திரிசூல் திட்டத்தை சிபிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. தப்பிய குற்றவாளி எந்த நாட்டில் தங்கியிருக்கிறான் என்பதை இன்டர்போல் போலீசார் உதவியுடன் கண்டறிவது, பின்னர் அந்நாட்டின் அமைச்சக உதவியுடன் அவனை நாடு கடத்த ஏற்பாடு செய்வது, பிறகு அங்கிருந்து அவனை இந்தியாவுக்கு நாடு கடத்துவது உள்ளிட்ட மூன்று வித செயல்பாடுகளே ஆபரேஷன் திரிசூல் ஆகும்.
இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குன்னமங்கலத்தை சேர்ந்த கரீம் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை கேரள போலீசார் விசாரித்து வந்தனர். இதில் தொடர்புடைய முகமது ஹனீபா மாக்டா வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டான். இதையடுத்து, அவன் இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். பின்னர் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் முகமதுவை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீசார் உதவியை நாடி இருந்தனர்.
இந்நிலையில் முகமது சவுதி அரேபியாவில் இருப்பதாக அந்நாட்டு போலீசார் சிபிஐ.க்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சிபிஐ கேரள போலீசாருக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா சென்ற கேரள போலீசார் அங்கு அவனை கைது செய்து நேற்று கேரளா அழைத்து வந்தனர். இத்துடன் சேர்த்து கடந்த 2022 ஜனவரி முதல் தற்போது வரை ஆபரேஷன் திரிசூல் மூலம் 33 குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.