கோவை: கோவையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு ஆளுநர்ஆர். என்.ரவி ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருந்தார். அவர் நேற்று கார் மூலம் கோவை ஈஷா யோக மையத்திற்கு சென்றார். பின்னர் மதியம் காரில் கோவை விமான நிலையம் சென்று, விமானத்தில் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அவினாசி ரோடு சித்ரா அருகே மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர். போலீசார் இதற்கு அனுமதி வழங்காமல் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் கட்சியினர், ‘‘காரல் மார்க்ஸை இழிவுபடுத்தி பேசிய ஆளுநரின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் அவருக்கு எதிர்ப்பு காட்டி கட்டாயம் கருப்புக்கொடி காட்டுவோம்’’ என கூறி ரோட்டில் குவிந்தனர். இதையடுத்து பத்மநாபன் உட்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.