95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலெஸில் நடைபெற்றிருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக நேரடி இந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்று இந்திய திரைத்துறைக்கு மிகப்பெரிய பெருமையை கொடுத்திருக்கிறது.
ஆஸ்காரை அலங்கரிந்த ஏ.ஆர்.ரஹ்மான்!
1929ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆஸ்கர் விருது விழா தற்போது 95வது ஆண்டை எட்டியிருக்கிறது. இத்தனை ஆண்டு காலத்தில் முதல் முறையாக ஒரு நேரடி இந்திய படத்துக்கான அங்கீகாரம் RRR படத்துக்கு கிடைத்தது எந்த அளவுக்கு பெருமையோ அதே அளவுக்கான பெருமை இதற்கு முன்னர் ஆஸ்கர் விருதுகளை தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல இந்தியர்களும் அலங்கரித்திருக்கிறார்கள்.
அதன்படி இதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து யாரெல்லாம் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்களை காணலாம்.
பானு அத்தையா – சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – காந்தி (1983)
40 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ரிச்சர்ட் அட்டென்பரோ என்பவரின் இயக்கத்தில் 1983ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவானதுதான் காந்தி. இது இந்திய படமாக இருக்காவிட்டாலும், இந்த படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த பானு பணியாற்றியதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
சத்யஜித் ரே – 1992
இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குநரும் பன்முகத் திறமையாளருமான சத்யஜித் ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் என கவுரவித்து 1992ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான் & குல்சார் – ஜெய் ஹோ – 2009
எண்ணற்ற படைப்புகள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு பிறகு 2009ம் ஆண்டுதான் இந்தியாவைச் சேர்ந்த படைப்பாளிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆனால் அப்போது ஒன்றல்ல இரண்டாக வந்து சேர்ந்தது. அதற்கு விதையாக இருந்தது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
டேனி போயெல் இயக்கத்தில் உருவான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக சிறந்த பாடலுக்கான பிரிவில் குல்சாருடன் இணைந்து ஆஸ்கர் விருதை ஏந்தினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மேலும் அதே படத்துக்கான சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் அதே ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதினை வென்று ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிர்பாராத பெருமையை சேர்த்திருந்தார்.
ரெசூல் பூக்குட்டி – சிறந்த ஒலி அமைப்பு – ஸ்லம்டாக் மில்லியனர் (2009)
ஸ்லம்டாக் மில்லியனர் இந்திய படமாக இருக்காவிட்டாலும் அதில் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தியர்களாகவே இருந்தார்கள். அதன்படி சிறந்த ஒலி வடிவமைப்புக்கான பிரிவில் இந்தியாவின் சிறந்த ஒலி வடிவமைப்பாளரான ரெசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருதை பெற்றார்.
அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ஆஸ்கர் விருது இந்திய படைப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் முழுக்க முழுக்க நேரடி இந்திய திரைப்படமான RRR-ல் இடம்பெற்ற பாடலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது போக, The Elephant Whisperers என்ற ஆவண குறும்படமும் ஆஸ்கரை கையில் ஏந்தியிருக்கிறது.
இதற்கு முன்னதாக மதர் இந்தியா (1957), சலாம் பாம்பே (1988), லகான் (2001), சிறந்த படங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் மிக முக்கியமான தயாரிப்பாளரான இஸ்மாயில் மெர்சென்ட் பெயர் உட்பட 17 முறை இந்திய படைப்பாளிகளின் பெயர்கள் ஆஸ்கர் தேர்வு பட்டியல் (Nominations) வரை இடம்பெற்றிருந்தது.
ஆனால் RRR மற்றும் The Elephant Whisperers முன்பு வரை எந்த நேரடி இந்திய படத்துக்கும் இப்படியொரு அங்கீகாரம் கிடைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: