ஆமதாபாத், –
டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் சேர்த்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி (59 ரன்), ரவீந்திர ஜடேஜா (16 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்றும் இந்தியா பேட்டிங்கில் கோலோச்சியது. அவசரப்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த கோலி, எச்சரிக்கையுடன் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். மறுமுனையில் ஜடேஜா 28 ரன்னில் கேட்ச் ஆனார்.
அடுத்து கோலியுடன், விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் இணைந்தார். மதிய உணவு இடைவேளை வரை ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. முதல் 32 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
கோலி சதம்
அதன் பிறகு சற்று வேகமாக மட்டையை சுழற்றிய பரத், கேமரூன் கிரீன் ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவர் தனது பங்குக்கு 44 ரன்கள் (88 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து கோலியுடன், ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்ேடல் கைகோர்த்தார். ஒன்று, இரண்டு வீதம் ரன் எடுப்பதில் கவனம் செலுத்திய கோலி நேற்றைய தினம் சதத்தை தொடும் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும். அந்த அளவுக்கு எதிரணியின் பீல்டிங் வியூகமும் பலமாக இருந்தது. 241 பந்துகளில் கோலி தனது 28-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவரது 2-வது மெதுவான சதம் இதுவாகும். 2019-ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு அதாவது 41 இன்னிங்சுக்கு பிறகு கோலி அடித்த முதல் சதம் இதுவாகும்.
செஞ்சுரி ஏக்கத்தை தணித்த பிறகு கோலி, மிட்செல் ஸ்டார்க்கின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி ஓடவிட்டார். அதன் பிறகு ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத் தினார். இன்னொரு பக்கம் அக்ஷர் பட்டேல் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்ட பிறகு ஆக்ரோஷம் காட்டினார். சுழற்பந்து வீச்சாளர் குனேமேனின் பந்து வீச்சில் மட்டும் 3 சிக்சர்களை கிளப்பி அட்டகாசப்படுத்தினார். முன்னதாக அவர் 14 ரன்னில் இருந்த போது சிக்சருக்கு தூக்கிய பந்தை ‘லாங்ஆப்’ திசையில் உஸ்மான் கவாஜா பிடிக்க முற்பட்டு தடுமாறி எல்லைக்கோட்டை தாண்டி போர்டு மீது விழுந்தார். அது சிக்சராக மாறியதுடன், இடது காலில் அடிபட்டு கவாஜா வெளியேற நேரிட்டது.
அக்ஷர் 79 ரன்
கோலி- அக்ஷர் பட்டேல் கூட்டணி ஸ்கோரை 500 ரன்களை தாண்ட வைத்தது. ஸ்கோர் 555 ஆக உயர்ந்த போது அக்ஷர் பட்டேல் 79 ரன்களில் (113 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ஸ்டார்க்கின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். நடப்பு தொடரில் அக்ஷரின் 3-வது அரைசதம் இதுவாகும்.
அவருக்கு பிறகு அஸ்வின் (7 ரன்), உமேஷ் யாதவ் (0) அடுத்தடுத்து வீழ்ந்ததால் இரட்டை சதத்தை நெருங்கிய விராட் கோலிக்கு சிக்கல் உருவானது. முதுகுவலி காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் களம் காண முடியவில்லை.
இதையடுத்து 9-வது விக்கெட்டுக்கு வந்த முகமது ஷமியின் துணையுடன் தனது இரட்டை சதத்தை அடிக்க கோலி முயற்சித்தார். அதே நேரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், சுழற்பந்து வீச்சாளர்களை லெக்சைடு வாக்கில் பந்து வீச வைத்து அதற்கு ஏற்ப லெக்சைடில் 5 பீல்டர்களை நிறுத்தினார். இதனால் கோலியால் பந்தை அவர்களை தாண்டி விரட்ட முடியவில்லை. 185 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய கோலி, சுழற்பந்து வீச்சாளர் மர்பி வீசிய அடுத்த ஓவரில் முட்டிப்போட்டு பந்தை விரட்ட முயற்சித்தார். ஆனால் சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்து லபுஸ்சேன் கையில் கேட்ச்சாக சிக்கியது. கோலி 186 ரன்களுடன் (364 பந்து, 15 பவுண்டரி) வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் ஆடாததால் அத்துடன் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
முடிவு கிடைக்குமா?
இந்திய அணி முதல் இன்னிங்சில் 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்து மொத்தம் 91 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 91 ரன் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சை டிராவிஸ் ஹெட்டுடன், பவுலர் மேத்யூ குனேமேன் தொடங்கினார். கவாஜா காலில் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக குனேமேன் இறக்கப்பட்டார். எஞ்சிய 6 ஓவர்களை சமாளித்த இவர்கள் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளனர்.
5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஆஸ்திரேலியா இன்னும் 88 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடைசி நாளில் ஏதாவது மாயாஜாலம் நிகழ்த்தினால் முடிவு கிடைக்கலாம். மற்றபடி இந்த டெஸ்ட் டிராவில் முடியவே பிரகாசமான வாய்ப்புள்ளது. டிராவில் முடிந்தாலும் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிக்கு உடல்நலம் பாதிப்பா?
விராட் கோலி சதத்தை எட்டியதும் அதை தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் கழுத்தில் அணிந்திருந்த செயின் டாலருக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அனுஷ்கா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உடல் நலக்குறைவோடு ஆட்டம் முழுவதும் நிதானமாக ஆடியது எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோலிக்கு உடல்நலக்குறைவு எதுவும் இல்லை என்று அவருடன் இணைந்து நீண்ட நேரம் பேட்டிங் செய்த அக்ஷர் பட்டேல் தெரிவித்தார். இது பற்றி அக்ஷர் பட்டேலிடம் கேள்வி எழுப்பிய போது, ‘கோலிக்கு உடல்நல பாதிப்பு எதுவும் இருந்ததா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் ரன் எடுக்க வேகமாக ஓடிய விதத்தை பார்க்கும் போது உடல்நலகுறைவு இருந்த மாதிரி தோன்றவில்லை’ என்றார்.
கோலியின் 75-வது சர்வதேச சதம்
* இந்த டெஸ்டில் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்சில் 15 பவுண்டரியுடன் 186 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1,205 நாட்களுக்கு பிறகு டெஸ்டில் மூன்று இலக்கத்தை தொட்ட கோலி சில சாதனைகளை தன்வசப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8-வது முறையாக சதம் அடித்த கோலி, அந்த அணிக்கு எதிராக அதிக தடவை சதம் அடித்த இந்தியர்களின் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சுனில் கவாஸ்கரை (8 சதம்) சமன் செய்துள்ளார். இந்த வகையில் தெண்டுல்கர் 11 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.
* டெஸ்டில் 28, ஒரு நாள் போட்டியில் 46, இருபது ஓவர் போட்டியில் 1 என்று ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் கோலி இதுவரை 75 சதங்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் நொறுக்கியவர்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் கோலி உள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 71 சதங்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.
* 2014-ம் ஆண்டில் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் 169 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் அதிகபட்சமாக இருந்தது. அதை நேற்று முந்தினார்.
முதுகுவலியால் களம் இறங்காத ஸ்ரேயாஸ் அய்யர்
இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று காலை முதுகின் அடிப்பகுதியில் வலி இருப்பதாக உணர்ந்தார். உடனடியாக காயத்தன்மை குறித்து அறிவதற்காக ஸ்கேன் எடுத்து பார்க்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அதன் முடிவை கிரிக்கெட் வாரியம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் முதுகுவலி காரணமாக அவர் முதல் இன்னிங்சில் களம் இறங்கவில்லை. ஒரு வேளை அவர் விளையாடி இருந்தால் விராட் கோலி தனது 8-வது இரட்டை சதத்தை எட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.