புதுடெல்லி: சீனா, தென் கொரியாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று கூடியது. அப்போது இரு அவைகளிலும் ஆளும் பாஜக உறுப்பினர்கள், சமீபத்தில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் தவறாக பேசிய ராகுல் காந்தி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “யார் ஜனநாயகத்தை நசுக்கி அழிக்க நினைக்கிறார்களோ, அவர்களே அதைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரியைப் போல இந்த அரசங்கத்தை நடத்துகிறார். பாஜகவினர் ஜனநாயகத்தை, அதன் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று போராடுகின்றனர்.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தப் பிரச்சினைகளை நாங்கள் அவையில் எழுப்பும்போது எல்லாம் எங்களுடைய “மைக்” அணைக்கப்படும், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படும்” என்றார்.
இதற்கிடையில், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்த பாஜகவினரின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் மோடி சீனா, தென் கொரியாவில் பேசிய பேச்சுக்களை நினைவுகூர்ந்துள்ளார். கார்கே தனது பதிவில், “நரேந்திர மோடி ஜி… சீனாவில் நீங்கள் பேசியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்றால் “முன்பு நீங்கள் இந்தியராக பிறந்ததற்கு அவமானம் அடைந்தீர்கள். இப்போது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பெருமைப்படுகிறீர்கள்”. இது இந்தியாவையும் இந்தியர்களையும் அவமானப்படுத்துவது போல் இல்லையா? உங்கள் அமைச்சர்களிடம் அவர்களின் நினைவுகள் கொஞ்சம் திருப்பி பார்க்கச் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ட்வீட்டில், “தென் கொரியாவில் நீங்கள் சொன்னது – கடந்த காலத்தில் என்ன பாவம் செய்தோமோ, இப்போது நாம் இந்தியாவில் வந்து பிறந்திருக்கிறோம் என மக்கள் வருந்திய காலம் ஒன்று இருந்தது. இதைத்தான் நாடு என்கிறார்கள் என்று சொன்னீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு பாடம் எடுப்பதற்கு முன்பாக உண்மையின் கண்ணாடியை முதலில் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பி பியூஸ் கோயல், “ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் இந்தியா குறித்து தவறாக சித்தரிக்க முயல்கிறார். இதற்காக அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.