இந்திய தயாரிப்புக்கு ஆஸ்கர் ; இந்தியாவிற்கு பெருமை – பிரதமர், முதல்வர் வாழ்த்து

புதுடில்லி: 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‛ தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‛ நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி
நாட்டு நாட்டு பாடல், ‛ தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்'க்காக ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. நாட்டு நாட்டு பாடல் உலகளாவிய பாடல். இன்னும் பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக இருக்கும். இந்தியா பெருமிதம் கொள்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது. கீரவாணி, சந்திரபோஸ், மற்றும் ஆர்ஆர் படகுழுவினருக்கு வாழ்த்துகள். நிலையான வளர்ச்சி மற்றும் இயற்க்கையோடு இயைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திஎலிபண்ட் விஸ்பரர்ஸ் படம் உணர்த்தியுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற இந்தியாவின் ‛‛ தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்'' விருதை வென்ற கார்த்திகி கோங்சல்வ்ஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்திய தயாரிப்புக்கு முதன் முதலில் ஆஸ்கர் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததைவிட சிறந்த செய்தி இல்லை. தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் உருவாக்கம் மற்றும் நகரும் கதைக்கு அனைத்து பாராட்டுகளும் தகுதியானது.

இந்தியா மற்றும் ஆசிய அளவில் முதல்முறையாக ஆஸ்கர் விருதை பெற்று நாட்டு நாட்டு பாடல் வரலாறு படைத்துள்ளது. இசையமைப்பாளர்கள் கீரவாணி, சந்திரபோஸ், ராஜமவுலி, ராம்சரண், ஜீனியர் என்டிஆர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
நாட்டு நாட்டு” பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணியையும், பாடலாசிரியர் சந்திரபோஸையும் பாராட்டி கவுரவித்தேன்.இன்று அவர்கள் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்
ஆஸ்கர் விருது வென்ற பெருமைமிகு இந்தியர்களுக்கு வாழ்த்துகள். கீரவாணி, ராஜமவுலி, கார்த்திகி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பார்த்திபன்
ஆஸ்கர் வென்ற ‛ தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் ஆர்ஆர்ஆர் பாடல் இரட்டிப்பு மகிழ்ச்சியும், கொள்ளொன்னா கவுரவமும் என பார்த்திபன் கூறியுள்ளார்.

சுசீந்திரன்
“The Elephant Whisperers” தமிழ் ஆவணப்படம் ஆஸ்கர் விருது. தமிழனாய், இந்தியனாய் மிகுந்த மகிழ்ச்சி என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.