சென்னை: தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து காயச்சல் முகாம் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னாக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சூர்யகுமார் தீக்காயம் அடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவை அமைச்சர் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து அவர் இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் பேசுகையில், “கரோனா பாதிப்பு 2020-ம் ஆண்டு தொடங்கி 36,000 என்ற அளவில் உச்சத்தை தொட்டது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பாக செயல்பட்டு அந்த எண்ணிக்கை தினமும் ஒன்று அல்லது இரண்டு அளவிற்கு குறைந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது தொற்றின் அளவு திரும்பவும் அதிகரித்து நேற்றைய தொற்றின் அளவு 40 அடைந்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகைளை சோப்புக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்புளுயன்சா காய்ச்சல் பரவுகிறது. அதைத் தடுக்கும் வகையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 1558 இடங்களில் அமைக்கப்பட்டு அதில் 2663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாம்கள் நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு தொடந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
திருச்சியில் 27 வயது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே மிகவும் மோசமான உடல் நிலையுடன் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கு காரணம் கரோனா பதிப்பா அல்லது H3N2 வைரஸ் பதிப்பா என்பது குறித்து அறிய ஆய்வகத்திற்கு மாதிரிகளை அனுப்பி உள்ளோம்” என்றார்.