`இலங்கையில் பண மோசடி செய்துவிட்டு, தமிழகத்தில் தஞ்சமடைந்துவிட்டார்!' – ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

இலங்கை, திரிகோணமலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த வாரம் இலங்கையிலிருந்து விமான மூலம் சென்னை வந்து அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமுக்கு வந்திருக்கிறார். அங்கு முகாம் பாதுகாப்பு அதிகாரிகளிடம், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் என்னிடமும், என்னைப் போன்று 12 பேரிடமும் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.72 லட்சத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு, இந்தியாவுக்கு கள்ளப் படகு மூலம் தப்பி வந்துவிட்டார்.

அவர்மீது திருகோணமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். இந்த நிலையில், ஜனார்த்தனன் மண்டபம் முகாமில் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம். அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். இது குறித்து மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு முகாம் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் புகார் மனு அளித்தார்.

முகாமில் தங்கியிருக்கும் மோசடி நபரின் படத்துடன் ஆட்சியரிடம் புகாரளித்த ஜெயக்குமார்

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயக்குமார், “இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் எங்களால் வாழ வழி இல்லாமல் அண்டை நாடுகளுக்குச் செல்வதற்கு முயற்சி செய்து வந்தோம். இது குறித்து திருகோணமலையைச் சேர்ந்த ஜனார்த்தனனிடம் எதேச்சையாகத் தெரிவித்தேன். அப்போது ஜெர்மன் நாட்டுக்கு கப்பலில் அனுப்பி வைக்கத் தான் ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ஆறு லட்சம் செலவாகும் எனக் கூறினார். அதனை நம்பி என்னுடைய விவசாய நிலம், வீடு, நகை, வாகனத்தை விற்று பணம் கொடுத்தேன்.

ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட மூன்று நாள்கள் கழித்து ஜனார்த்தனனை குடும்பத்துடன் காணவில்லை. அப்போதுதான் என்னைப் போன்று 12 பேரிடம் இதேபோல் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி, ஆறு லட்சம் வீதம் 72 லட்சத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ஏமாற்றப்பட்ட நாங்கள் அனைவரும் ஜனார்த்தனன்மீது திருகோணமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்.

இந்த நிலையில்தான், ஜனார்த்தனன் குடும்பத்துடன் கள்ளப் படகு மூலம் ராமேஸ்வரத்துக்கு வந்து, மண்டபம் முகாமில் குடும்பத்துடன் அகதியாக தஞ்சமடைந்திருப்பது பற்றி தமிழக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். இது குறித்து திருகோணமலை காவல் நிலையத்தில் தெரிவித்தோம்.

அவர்கள் ஜனார்த்தனனை இங்கு அழைத்து வந்தால், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி பணத்தை மீட்டுக் கொடுப்பதாகக் கூறினர்.

அதற்காக பணத்தை ஏமாந்தவர்கள் ஒன்று சேர்ந்து கடன் வாங்கி என்னிடம் கொடுத்து ஜனார்த்தனனை இலங்கைக்கு அழைத்து வருமாறு அனுப்பி வைத்தனர். மண்டபம் முகாமுக்குச் சென்றால், போலீஸில் புகார் அளிக்குமாறு கூறினர்.

போலீஸில் ஜனார்த்தனன் பணம் வாங்கிய வீடியோ, இலங்கை திரிகோணமலை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் ஆகியவற்றை காண்பித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம்

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்திருக்கிறேன். ஜனார்த்தனனால் அங்கு 12 குடும்பங்கள் இருக்க இடம், உண்ண உணவுகூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறோம். தயவுசெய்து இந்திய அரசு ஜனார்த்தனனை இலங்கைக்கு அனுப்பி வைத்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க உதவி செய்ய வேண்டும்” என கண்ணீர் மல்கக் கூறினார்.

இவரின் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.