புதுடில்லி: வரும் ஜூன் 7ல் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறும் என கூறப்பட்டது.
அதே நேரத்தில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏதேனும் ஒரு போட்டியில் வென்றால் கூட பைனலுக்கு தகுதிப்பெறும் என்ற சூழலில், முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருந்தது. இதன்மூலம் ஆஸி., அணி பைனலுக்கு தகுதி பெற்றது.
இதனால் 4வது போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒருவேளை இந்திய அணி தோற்றாலோ, டிரா ஆனாலோ, இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஏதேனும் ஒன்றில் தோற்றாலும் இந்திய அணி தகுதி பெறும் எனக் கூறப்பட்டது.
மாறாக இலங்கை 2-0 என வென்றால் அந்த அணி தகுதிப்பெறும். இந்த நிலையில் கடந்த மார்ச் 9ம் தேதி இந்தியா – ஆஸி., அணிகளுக்கு இடையேயான 4வது போட்டியும், இலங்கை – நியூசி., அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் துவங்கின.
இதில், நியூசிலாந்து அணி, இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான பந்தயத்தில் இருந்து இலங்கை வெளியேறி, இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது. வரும் ஜூன் 7ல் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
4வது டெஸ்ட் ‘டிரா’
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களும், இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்களும் எடுத்திருந்தது. 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய ஆஸி., அணி 5வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி ‘டிரா’வில் முடிவடைந்தது. இதனையடுத்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement