எல்லா தேர்தலும் எங்களுக்கு அக்னி பரீட்சைதான்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கருத்து

பெங்களூரு: தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து தேர்தல்களுமே அக்னிப்பரிட்சை தான் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ ஆட்சி முடிவடைய உள்ள நிலையில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகளை பார்வையிட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் கர்நாடகா சென்றுள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவில் சுதந்திரமான, வௌிப்படையான தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து தேர்தல்களுடன் சேர்த்து இதுவரை 400 சட்டப்பேரவை தேர்தல்கள், 17 நாடாளுமன்ற தேர்தல்கள், 16 குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தல்களை  தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது. பெரும்பாலான மக்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளை நம்பியிருந்தாலும், தேர்தலுக்கு பின் வௌியாகும் முடிவுகள் ஏற்று கொள்ளப்படுகின்றன. இந்திய ஜனநாயகத்தில் தேர்தலின் மூலமாகவே ஒவ்வொரு முறையும் அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுகிறது.

பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க விஷயம். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா தனது சமூக, கலாசார, பொருளாதார, புவியியல், அறிவியல், மொழியியல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான பேச்சுவார்த்தைகள் வாயிலாகவே தீர்வு கண்டுள்ளது. தேர்தல் முடிவுகளை மக்கள் நம்புவதாலேயே இது சாத்தியமாகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரையில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் அக்னிப்பரிட்சை தான்” இவ்வாறு  ராஜீவ் குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.