கடையம் அருகே நெகிழ்ச்சி; வடமாநில பெண்ணுக்கு `வளைகாப்பு’ வைபவம்: கறி விருந்து, ஆட்டத்துடன் கொண்டாட்டம்

கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடையம் அருகேயுள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்திலுள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கொல்கத்தாவை சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்த சூளையில் வேலை பார்த்து வரும் பொறி – தோனியம்மா என்ற தம்பதி திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இவருக்கு நேற்று வளைகாப்பு விழா நடந்தது. இவ்விழாவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடையம், கோவிந்தபேரி, முக்கூடல்  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வரும் அவரது உறவினர்கள் கலந்துகொண்டனர். அவர்களது சடங்குப்படி வளைகாப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து சிக்கன், மட்டன் என கறி விருந்து நடைபெற்றது. மேலும் வடமாநில பெண்கள், ஆண்கள் நடனம் மூலம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து வடமாநில தொழிலாளி பொறி என்பவர் கூறுகையில், நான் தமிழகம் வந்து பல வருடங்கள் ஆகிறது.

இங்கேயே வேலை பார்த்து வருகிறேன். தற்போது எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இதில்  சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் ஊரில் உள்ளது போல் இங்கு மிகவும் சந்தோஷமாக வளைகாப்பு விழா கொண்டாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிர்ந்து வந்த நிலையில் தற்போது இங்கு நடந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு  உணர்த்தியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.