திருச்சூர்: கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்துவிட்டது என்றும் அவர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமித் ஷா, ”கேரளாவில் ஆளும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும், அவர்களை எதிர்க்கும் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரசும் உள்ளன. இதில், கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்துவிட்டது. அவர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடும் நிலையில் உள்ளனர். மற்றொரு கட்சியான காங்கிரஸ் தனக்கான அவசியத்தை இழந்து வருகிறது. புறக்கணிப்பின் விளிம்பில் அக்கட்சி உள்ளது.
கம்யூஸ்ட்டுகளும் காங்கிரசும் கேரளாவில் மோதிக்கொள்கிறார்கள். அனால், அவர்கள் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள். இருவருமாக சேர்ந்து ஆளும் பாஜகவை எதிர்த்தார்கள். ஆனாலும் திரிபுரா மக்கள் பாஜகவையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள்.
பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ததன் மூலம் அதன் வன்முறையில் இருந்து கேரளா விடுவிக்கப்பட்டுள்ளது. இதை பாஜக அரசு செய்தது. ஆனால், கம்யூனிஸ்டுகளோ, காங்கிரசோ இதை வரவேற்கவில்லை. அவர்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணம், ஓட்டு வங்கி அரசியல்தான். ஆனால், பாஜக ஓட்டு வங்கி அரசியல் செய்வதில்லை. அந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்டும், நாட்டுக்கு எதிராக செயல்பட்டும் வந்தது. அதன் காரணமாகவே அதற்கு தடை விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்கள் தரம் தாழ்ந்துவிட்டன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசினார். நான் ராகுல் காந்திக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் மோடியை திட்ட திட்ட அவர் மதிப்பு கூடும்; நீங்கள் திட்ட திட்ட தாமரைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். கேரள மக்கள் வன்முறையையும் ஏற்க மாட்டார்கள்; கம்யூனிஸ்ட்டுகளின் வன்முறை அரசியலையும் ஏற்க மாட்டார்கள். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம் கேரளாவிலும் ஒட்டுமொத்த நாட்டிலும் வளர்ச்சியைப் பார்க்க முடியும்” என தெரிவித்தார்.