கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 224 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 என வெற்றி பெற்றன. ஆனால் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காததால் பல்வேறு குளறுபடிகள் நடந்தன.
பாஜக பிளான்
இதுபோன்ற சூழலை 2023 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க பாஜக மும்முரம் காட்டி வருகிறது. கூடவே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் களப் பணியில் ஈடுபட்டுள்ளன. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவிற்கு அக்னி பரீட்சையாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
வட இந்தியாவில் பிரதமர் மோடி, பாஜக, இந்துத்துவா சித்தாந்தம், ராமர் கோயில் போன்றவற்றின் மீதான ஈர்ப்பு ஆங்காங்கே காணப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த வடகிழக்கு மாநில தேர்தலும் பாஜகவிற்கு சாதகமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் களம் அப்படியில்லை. பாஜக நேரடியாக ஆட்சி கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது.
கர்நாடக தேர்தல்
இதை வைத்து மற்ற மாநிலங்களுக்கும் தாமரையை மலரச் செய்ய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் கர்நாடக தேர்தலை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக தலைமை பார்க்கிறது. தற்போது காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதாக சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை மீண்டும் தேர்தல் அரசியலுக்குள் இழுத்து வந்துள்ளனர்.
மீண்டும் எடியூரப்பா
80 வயதான எடியூரப்பா அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ள திட்டமிட்ட நிலையில், லிங்காயத் வாக்கு வங்கி அரசியலுக்கு இன்னும் தேவைப்படும் நபராக பார்க்கப்படுகிறார். இந்த வாக்குகளை பங்கு போட மாற்று கட்சிகளும் வியூகம் வகுத்துள்ளன. இதனால் கர்நாடக தேர்தல் பிரச்சாரக் களத்தில் எடியூரப்பாவிற்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், என் மீது பிரதமர் மோடி நம்பிக்கை வைத்துள்ளார்.
பாஜக ஆட்சி
அவர் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடித்தார். அதேபோல் கர்நாடகாவிலும் அதிகப்படியான இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்க உழைப்போம். இது அடுத்து வரும் மக்களவை தேர்தலுக்கும் பொருந்தும். தற்போது மக்களின் நிலைப்பாடு பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறது.
ராகுல் காந்தி பேச்சு
இது தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றார். இதையடுத்து லண்டனில் ராகுல் காந்தி பேசியது பற்றிய கேள்விக்கு, இது முற்றிலும் எதிர்பாராதது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ராகுல் காந்தி இப்படி பேசுவார் என நினைக்கவில்லை. இதுபோன்ற வார்த்தைகளை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று எடியூரப்பா தெரிவித்தார்.