காவல் பணியில் ‘ஆர்ஆர்ஆர்’களை பின்பற்றுக: சேலம் மாவட்ட போலீஸாருக்கு எஸ்பி வித்தியாச அறிவுறுத்தல்

சேலம்: ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலகளாவிய பெருமை பெற்றுள்ள நிலையில், சேலம் மாவட்ட போலீஸார், பணியின்போது அனைவரிடமும் மரியாதை (Respect), சிறப்பாக செயல்படும் போலீஸாரை அங்கீகரித்தல் (Recognition), காவலரின் உடல் நலத்துக்கான ஓய்வு (Rest) வழங்குதல் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர்-களை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட எஸ்பி. சிவகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாகி, நாட்டுக் கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் என்ற படத்தின் பெயரை நினைவூட்டுவது போல, சேலம் மாவட்ட போலீஸார் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகளை ஆர்.ஆர்.ஆர். என அடையாளப்படுத்தி, சேலம் மாவட்ட எஸ்பி., சிவகுமார் குறிப்பாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், அனைவரிடமும் மரியாதைடனும் அன்புடனும் கண்டிப்புடனும் நடந்து காவல் பணி ஆற்ற வேண்டும்.காவல் நிலையத்துக்கு மனு கொடுக்க வருவோரை காக்க வைக்காமல், உடனடியாக விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்துக்களைத் தடுக்க, தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து, அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கோவில் திருவிழாக்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, விழா நடத்துவர்களிடம் கலந்து பேசி, எவ்வித பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் / வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களிடம் தினமும் பேசி அவர்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். நல்லவர்களுக்கு பாதுகாப்பாகவும், கெட்ட நடத்தை உள்ளவர்களுக்கு பயத்தையும் உண்டாக்கும் வகையிலும் உங்கள் பணி சிறந்து இருக்க வேண்டும்.

ஒவ்வொரு காவலரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களது திறமைகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிறப்பாக வேலை வாங்குவது உயர் அதிகாரிகளின் திறமையாகும். பெண்கள், வயதானவர்களுக்குப் பாதுகாப்பு செய்தல், பள்ளி கல்லூரி பகுதிகளில் கண்காணித்தல் போன்ற பலவிதமான கலவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாகனத் தணிக்கையின்போது, மக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனத்தில், குடும்பத்துடன் பயணிக்கும் குடும்பத் தலைவரை, அவரது குடும்பத்தினர் முன்பாக அவமானப்படுத்தாமல், அவர் என்ன தவறு செய்திருக்கிறார்களோ, அதனை கண்ணியமாக எடுத்துச் சொல்லி, அதற்குரிய வழக்குப் பதிய வேண்டும். பிரச்சனை செய்பவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், அவர்கள் செய்யும் தவறுகளை படம் பிடிக்கவும், பின்னர் தவறுக்கேற்ப வழக்கு பதிவு செய்யவும் வேண்டும்.

குறிப்பாக, தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அனைவரிடமும் மரியாதையுடன் (Respect) பேச வேண்டும். சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவரின் திறமைகளையும் கண்டறிந்து பாராட்ட (Recognition) வேண்டும். காவலர்களின் உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களுக்குப் போதிய ஓய்வு (Rest) வழங்கும் வகையில், அன்றாட பணிகளை திட்டமிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக உடல் நலன் இருப்பதில்லை. அதனால் தேவையான விடுமுறைகளை உடனடியாகத் வழங்க வேண்டும். இந்த மூன்று ஆர்ஆர்ஆர் (RRR)-களை கண்டிப்பாக செயல்படுத்தி, கண்ணியத்தோடு பணியாற்றி சேலம் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.