தர்மபுரி : கோடைகாலம் தொடங்கியதையடுத்து, தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் தீ பிடிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக சுமார் 350 கி.மீ தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது.தர்மபுரி வனக்கோட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஒகேனக்கல், மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காடுகளில், பெரும்பான்மை இலையுதிர் காடுகளாகவே உள்ளன. ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன.
காவிரி ஆற்றங்கரையையொட்டி காடுகள் அமைந்துள்ளன. தர்மபுரி மாவட்ட காடுகளில் தேக்கு, சந்தனம், வேம்பு, அசோகு, புளியம், துரிஞ்சை, ஆல், வேலம், நீலகிரி, எட்டி மரம், நாகமரம், அரசு, வில்வம், வெப்பாலை, மூங்கில், கருங்காலி, புங்கம் ஆகிய மரங்களும், வேலிகாத்தான், வெடத்தாரை, துளசி, மருதாணி, ஆவாரம், நொச்சி, நச்சட்டன் காரை ஆகிய செடிவகைகளும், காட்டுவள்ளிக் கொடி, கட்டுக்கொடி, சுரட்டைக் கொடி, ஊணாங்கொடி ஆகிய கொடி வகைகளும் காணப்படுகின்றன.
இதனிடையே, கோடை காலத்தையொட்டி வனப்பகுதியில் தீ பிடிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தீ தடுப்பு குறித்து, வனக்கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோட்டீஸ் விநியோகம் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. வத்தல்மலை, மலையூர், கோட்டூர் மலை, ஏரியூர் மலை, அலக்கட்டுமலை, சித்தேரி, சிட்லிங் உள்ளிட்ட மலைக்கிராமங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல், வனப்பகுதியை ஒட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட வனக்கிராமங்களிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஒகேனக்கல், மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை வனச்சரக காடுகளில், கோடை வெப்பத்தால் தீ பிடிக்காமல் இருக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி வனச்சரகத்தில் 40 கி.மீ தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாலக்கோடு வனச்சரகத்தில் 60 கி.மீ தூரமும், பென்னாகரம் வனச்சரகத்தில் 50 கி.மீ தூரமும், ஒகேனக்கல் வனச்சரகத்தில் 50 கி.மீ தூரமும், மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய வனச்சரக காடுகளில் 150 கி.மீ தூரமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்துதல், ரோந்து செல்லுதல் போன்ற பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்,’ என்றனர்.