மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கௌதம் சியாமல் கட்டுவா. இவர் கோவை இடையர் வீதியில் புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சூரிய பிரகாஷ், பிரகதீஷ், பிரகாஷ், வேல்முருகன் ஆகியோர் வந்திருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் வழிவிடாமல் நடந்து சென்றதாகக் கூறி, கௌதமையும், அவருடைய நண்பர்களையும் இந்த நால்வரும் தாக்கியிருக்கின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் பானிபூரி கடையில் இருந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களையும் சூரியபிரகாஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியிருக்கின்றனர். இந்தத் தகவல் கிடைத்தவுடன் அங்குள்ள மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்குத் திரண்டனர். இந்தச் சம்பவம் குறித்து கௌதம் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சூரிய பிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாணவர்கள் இருவர் என 4 பேரைக் கைதுசெய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனிடையே தாக்குல் நடத்தியவர்கள் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று இந்து முன்னணி அமைப்பு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரகாஷ் என்பவர் இந்து முன்னணியில் இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், அவரது செல்போனில் அதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாகவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சூரியபிரகாஷ் என்பவரும் இந்து முன்னணி அமைப்பில் இருந்ததாகச் சொல்லியிருப்பதாகவும், இந்தச் சம்பவத்தின்போது பிரகாஷ், சூரிய பிரகாஷ் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.