சிவகங்கை: சிவகங்கை டி.புதூரில் தர்ம முனீஸ்வரர் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 41 பேர் மாடுகள் முட்டியதில் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், டி.புதூரில் தர்ம முனீஸ்வரர் கோயில் மாசித்திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு டி.புதூர் கண்மாய் முன் உள்ள பொட்டல் களத்தில் நேற்று நடந்தது. வாடி வாசலில் முதலில் கோயில் காளைக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் 380 மாடுகள் வாடி வழியாக அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அதே போல் ஆங்காங்கே பொட்டல்களில் கட்டு மாடுகளாக 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு சில்வர் பாத்திரம், வெள்ளிக் காசுகள் கிராமத்தினர் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன. காளைகளை பிடித்தவர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 41 பேர் காயமடைந்தனர். இதில், லேசான காயமடைந்து சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றவர்கள் தவிர்த்து 8 பேர் மட்டும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதையொட்டி ஏடிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று டி.புதூர் எல்கையில் உள்ள வயல் கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த சிவகங்கை தீயணைப்புத்துறையினர் விரைந்து அந்த காளையை உயிருடன் மீட்டனர்.