சேலம் மாவட்ட காவல்துறையினர் தங்களின் பணியின்போது அனைவரிடமும் Respect, Recognition, Rest (மரியாதை, சிறப்பாக செயல்படும் போலீஸாரை அங்கீகரித்தல், காவலரின் உடல் நலத்துக்கான ஓய்வு) வழங்குதல் ஆர்ஆர்ஆர்-களை பின்பற்ற வேண்டும் என்று அம்மாவட்ட எஸ்பி. சிவகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் மரியாதைடனும் அன்புடனும் கண்டிப்புடனும் நடந்து காவல் பணி ஆற்ற வேண்டும்.
- காவல் நிலையத்துக்கு மனு கொடுக்க வருவோரை காக்க வைக்காமல், உடனடியாக விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்துக்களைத் தடுக்க, தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து, அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
- கோவில் திருவிழாக்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, விழா நடத்துவர்களிடம் கலந்து பேசி, எவ்வித பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் / வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களிடம் தினமும் பேசி அவர்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
- பெண்கள், வயதானவர்களுக்குப் பாதுகாப்பு செய்தல், பள்ளி கல்லூரி பகுதிகளில் கண்காணித்தல் போன்ற பலவிதமான கலவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- நல்லவர்களுக்கு பாதுகாப்பாகவும், கெட்ட நடத்தை உள்ளவர்களுக்கு பயத்தையும் உண்டாக்கும் வகையிலும் உங்கள் பணி சிறந்து இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு காவலரின் தனித்திறமைகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிறப்பாக வேலை வாங்குவது உயர் அதிகாரிகளின் திறமையாகும்.
- வாகனத் தணிக்கையின்போது, மக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனத்தில், குடும்பத்துடன் பயணிக்கும் குடும்பத் தலைவரை, அவரது குடும்பத்தினர் முன்பாக அவமானப்படுத்தாமல், அவர் என்ன தவறு செய்திருக்கிறார்களோ, அதனை கண்ணியமாக எடுத்துச் சொல்லி, அதற்குரிய வழக்குப் பதிய வேண்டும்.
- பிரச்சனை செய்பவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், அவர்கள் செய்யும் தவறுகளை வீடியோ எடுத்து, பின்னர் தவறுக்கேற்ப வழக்கு பதிவு செய்யவும் வேண்டும்.