ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே வயதான தாயை காரில் கொண்டு வந்து நடுரோட்டில் மகள் விட்டுவிட்டு சென்றார். அவரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி சாலையில் கடந்த 2 நாட்களாக 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பட்டினியுடன் மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் மூதாட்டிக்கு தண்ணீர் மற்றும் டீ, காபி, உணவு வழங்கி வந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். ஆனால் அவர் பெயர் முகவரி சொல்லத்தெரியாமல், கடந்த 2 நாட்களுக்கு முன் தனது மகள் காரில் ஏற்றி வந்து சாலையில் விட்டுச்சென்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த மூதாட்டியை மீட்டு மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள நேசம் முதியோர் காப்பகத்தில் விட்டனர்.
இதையடுத்து மூதாட்டி குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் ஜோலார்பேட்டை காவல் நிலையம் 8668162274 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளை பெற்று நோய் நொடியின்றி காப்பாற்றி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தாயின் தியாகத்தை துச்சம் என நினைத்து வயதான காலத்தில் ஆதரிக்காமல் காரில் அழைத்து வந்து சாலையில் தவிக்கவிட்டு சென்ற மகள் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.