திருச்சி: திருச்சியில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் ஏறி, நடைபாதையில் தூங்கிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். திருச்சி காந்திமார்க்கெட் பெரியகம்மாள தெருவை சேர்ந்தவர்கள் லெட்சுமி நாராயணன் (23), அஸ்வந்த் (21). சகோதரர்களான இருவரும், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ராஜகோபுரத்துக்கு காரில் சென்றனர். காரை அஸ்வந்த் ஓட்டினார். கீதாபுரம் என்ற இடத்தில் திடீரென காரின் முன்பக்க மற்றும் பின் பக்க டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் ஏறி, அங்கு தூங்கி கொண்டிருந்த 3 பேர் மீது ஏறி இறங்கியது. இதில் ஒருவர் அதே இடத்திலும், மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் இறந்தனர். திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பலியான 3 பேரும் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் என்றும், 60 வயதுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்திய லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.