நாகப்பட்டினம், பிடாரங்கொண்டான், பொன் செய் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருக்கிறார். இவர் கடந்த 12.3.2023-ம் தேதி கன்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வேலூருக்குப் புறப்பட்டார். மாதவரம் 200 அடி சாலை, சின்ன ரவுண்டானா அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக விக்னேஷ் சென்றார். பின்னர் அவர் வெளியில் வந்து பார்த்தபோது கன்டெய்னர் லாரியைக் காணவில்லை.
இது குறித்து அவர் மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை, செங்குன்றம் பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் (25) என்பவர் கன்டெய்னர் லாரியைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்த போலீஸார் கன்டெய்னர் லாரியை மீட்டனர். கைதான ராபர்ட்மீது ஏற்கெனவே இரண்டு திருட்டு வழக்குகள் மாதவரம் காவல் நிலையத்தில் இருக்கின்றன. விசாரணைக்குப் பிறகு ராபர்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.