புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தொடர்பு குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்திருக்கிறது.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இவ்வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் சிக்கியுள்ளார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் தனியாருக்கு மதுபான கடைகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஏராளமான மதுபான கடைகள். இன்டோஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூசன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. இந்த நிறுவனத் தின் 65 சதவீத பங்குகள் சவுத் குரூப் நிறுவனத்திடம் உள்ளன.
அதாவது சவுத் குரூப் நிறுவனத்தை சேர்ந்த அருண் பிள்ளைக்கு இன்டோஸ்பிரிட் நிறு வனத்தில் 32.5 சதவீத பங்குகளும், பிரேம் ராகுலிடம் 32.5 சதவீத பங்குகளும் உள்ளன. இவர்கள் இருவரும் கவிதாவின் பினாமிகள்.
இன்டோஸ்பிரிட் நிறுவனத் துக்கு சாதகமாக செயல்பட ஆம் ஆத்மி தலைவர்களுக்கு சவுத் குரூப் சார்பில் ரூ.100 கோடி லஞ்சம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவின் ஆடிட்டர் புச்சி பாபு மற்றும் ராமச்சந்திர பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமச்சந்திர பிள்ளை ஏற்கெனவே அளித்த வாக்குமூலத்தை மறுத்து வருகிறார். புச்சி பாபுவின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே கவிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 19, 20-ம் தேதிகளில் மணீஷ் சிசோடியாவின் பிரதிநிதி விஜய் நாயர், கவிதாவை சந்தித்துப் பேசியுள்ளார். இதை ஆடிட்டர் புச்சி பாபு உறுதி செய்திருக்கிறார். வரும் 16-ம் தேதி கவிதாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும். அப்போது பல்வேறு திருப்பங்கள் ஏற்படலாம். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.